நிரஞ்சன் பாரதி. மகாகவி சுப்பிரமணிய பாரதியாரின் எள்ளுப்பேரன். புகழ்பெற்ற கர்நாடக இசைக்கலைஞர் ராஜ்குமார் பாரதியின் மகன்.

கவிஞர், பாடலாசிரியர், எழுத்தாளர், பேச்சாளர், தமிழாசிரியர் எனப் பல தளங்களில் இயங்கி வருபவர்.

படித்தது பொறியியலும் மேலாண்மையும் என்றாலும் பிடித்தது தமிழும் இயற்கையும் தான்.

வாலி, கண்ணதாசன் போன்றோரின் கவிதைகளால் படைப்பூக்கம் பெற்றுத் தனது பதினாறாம் அகவையில் இருந்து கவிதை எழுதி வருகிறார்.

2009ஆம் ஆண்டு கவிஞர் வாலியின் அணிந்துரையுடன் கூடிய “வானமே உன் எல்லையென்ன” என்ற கவிதைத் தொகுப்பை வெளியிட்டார். இவரது கவிதைப்பணியைப் பாராட்டி 2018ல் “இலக்கிய வீதி” அமைப்பு “அன்னம்” விருது வழங்கிச் சிறப்பித்தது.

2011ஆம் ஆண்டு வெளியான மங்காத்தா திரைப்படத்தில் இடம்பெற்ற “கண்ணாடி நீ கண் ஜாடை நான்” பாடலை எழுதித் தமிழ்த் திரைத்துறையில் காலடி எடுத்து வைத்தார்.

இந்தப் பாடலுக்கு RADIO MIRCHI-யின் சிறந்த வளர்ந்து வரும் பாடலாசிரியருக்கான விருதினை வென்றார். BIG FM பண்பலையின் சிறந்த அறிமுகப் பாடலாசிரியர் விருதினையும் பெற்றார்.

மங்காத்தாவை தொடர்ந்து சென்னை – 28 பகுதி 2, வடகறி, செம போத ஆகாத, காளிதாஸ், வணங்காமுடி, பியார் பிரேமா காதல், காளிதாஸ் உள்ளிட்ட படங்களிலும் பாடல் எழுதியிருக்கிறார். திரைப்படங்கள் மட்டுமல்லாது தொலைக்காட்சித் தொடர்களுக்கும் பாடல், கவிதை எழுதியிருக்கிறார் . தனிநபர் பாடல்களும்(INDEPENDENT MUSIC, ALBUMS) எழுதியிருக்கிறார்.

மேலும், பரத நாட்டிய நிகழ்ச்சிகளுக்கு பாடல், ஸ்கிரிப்ட் எழுதியிருக்கிறார்.

இவர் எழுதிய கட்டுரைகள் அமுதசுரபி, தமிழ் இந்து உள்ளிட்ட இதழ்களில் வெளிவந்திருக்கின்றன.

இவை தவிர பள்ளி, கல்லூரிகளில் நடக்கும் இலக்கிய நிகழ்ச்சிகளில் பங்கேற்றுச் சொற்பொழிவுகளை நிகழ்த்தி வருகிறார்.

இணையம் வழியே தமிழ் பயிற்சி வகுப்புகளும் எடுத்து வருகிறார்.

தன்னை வளர்க்கும் தமிழை இயன்ற அளவு தானும் வளர்க்க வேண்டும் என்பதே இவர் கொண்ட கனவு.