தாயாக்கி

என்னை நடுத்தெருவுக்குக்

கொண்டு வந்தவனே!!!

நீ வாழ்க !!!!

நடுத்தெருவுக்கு வந்தால்

வறுமை என்பார்கள்

நடுத்தெருவுக்கு வருவது

பெருமை என்பேன் நான் ;

அன்பால் நடுத்தெருவுக்கு வருதல்

அளப்பரும் அங்கீகாரமன்றோ?!!!

அதுவும் அதை நீ கொடுத்தது

அழகான அற்புதமன்றோ?!!!

அந்த அற்புதம்

நினைக்கும் தோறும்

அகத்தில் ஊறி ஊறி வருவதன்றோ?!!!

சாலை சாம்ராஜ்ஜியனே !!!

காற்றில் சிறுமுத்தம் தந்து

சின்னதாக சீட்டியடித்து

உன் நாட்டில்

நல்லெண்ணம் கொண்டு

காலடி வைத்தேன் ;

உன் கணக்கில்

நல்வாசம் கொண்டவன் ஆனேன்;

“நாய”கம் என்னும் நானிலம் புகுந்தேன்;

வாசம் முகர்வது

பாசம் பகர்வது

உன் அடையாளம் என்றறிந்தேன்;

பார்த்ததும்

பாய்ந்தோடி வந்து

பாதி உடலேறி

முகம் பார்த்து

முன்னங்கால் பரப்பி

நிற்பாயே!!

என்

கீழான அன்பும்

உன்

மேலான அன்பும்

கலக்கும் பொற்கணம் அது;

நீ

மூச்சிரைப்பது

உன்னிடம் உள்ள

பாசத்தின் எடையைத்

தாங்க முடியாததாலா?

சிவந்த சிற்றருவி போல்

தொங்கும் உன்

நாவிலிருந்து வழியும்

வியர்வைத்துளி என் மேல்

படுகையில் பாசத்துளியாகிறது;

ஒருவரை விரும்ப

வியர்வை சிந்துபவன்

உலகில் நீ ஒருவனே !!

மனிதரைப் போல்

பாசத்தை மறைக்கும்

குணம் இல்லை உன்னிடம்;

பகிர்ந்தாலன்றோ அது பாசம்?

ஆறறிவு எனக்கு;

ஐந்தறிவு உனக்கு

வளைதல் தானே

ஆறின் இயல்பு;

வளைந்தேன் உன்னிடம்;

எனக்கு பாசம் பரிமாறி

அன்பின் சிகரம் அழைத்துப் போனாய் ;

இறங்கி வந்தால் உச்சம் தொடலாம் என்றாய்;

கயிற்றால் உன்னை

நான் கட்டுவதில்லை – ஆனால்

தினந்தோறும் என்னைப்

பாசக்கயிற்றினால் கட்டிப்போடும்

நீ காலன் அல்லன்;

வாஞ்சையுள்ள வாலன் ;

வீடு மட்டுமல்ல..

திறந்து வைத்தால் மனதிற்குள்ளும்

நுழைபவன் நீ….

உடலையே மொழியாக்கிப்

பேசும் நீ

வாயில்லாப் பிராணி

என்று அறிவியல் சொல்கிறது;

என் அகவியல் சொல்லவில்லை;

அன்னியரை உன்

எல்லைக்குள் வர

விடுவதில்லை நீ;

அன்பரை உன்

எல்லையினின்று பிரிய

அனுமதிப்பதில்லை நீ;

உன்மேல்

வீச்சம் அடித்தாலும்

அழுக்கிருந்தாலும்

சிதிலமடைந்த ஆலயத்தில் உள்ள

ஓர் அணையா சுடர் போல்

தூய உன் ஆன்மாவை

நேசித்து மகிழ்கிறேன் நான்;

உடலால் நான்

தந்தையாகலாம்…

ஆனால் நீயே

என்னைத் தாயாக்கினாய்;

ஏனெனில் நீயொரு தாயாக்கி நாய்;

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *