கானகத்து கணிப்பொறி

பூமி என்னும்
பச்சைத் தாளில்
கறுப்பு மையால்
கடவுள் எழுதிக்கொண்டே இருக்கும்
முடிவில்லாக் கருங்காவியமே !!!

காவியங்களில் எல்லாம்
பெருங்காவியமே !!

உன்னைப் படிக்கப் படிக்க
பக்கங்கள் எல்லாம்
பெருகிப் பெருகி வளரும்
விந்தை கண்டேன் ;

பக்கங்கள் தோறும் நீ
என் ‘பக்கம்’ வர வர
உருகி உருகி வழியும்
சிந்தை கொண்டேன் ;

ககனம் தீண்டும்
கருங்கற்கோட்டையென
கண்ணளாவி நிற்கும்
கம்பீர பேருடலென்ன?

நாலடியாரே!!
நடக்கும் போதெல்லாம்
அசையும் தூண்களோ என
ஆளை மயக்கும் உன் காலழகென்ன?

தூண்களில் செதுக்கிய
துய்ய முத்தாரங்களென
நகைக்கும் நகங்களென்ன?

அந்தரத்தில்
சுழலும் சாட்டையென
காற்றில் பறக்கும் உன் வாலழகென்ன?

நின்றவாறு
தனக்குத்தானே
சாமரம் வீசும்
காட்டுமன்னனோ எனக்
காட்டும் செவியழகென்ன?

இருமுனையிலும்
நீண்டு ஆட்சி செலுத்தும்
வெள்ளிக் கோல்கள்
என மின்னும் பல்லழகென்ன?

மலையகம் என்னும்
மத்தகத்திலிருந்து

ஆர்ப்பரிப்பே இல்லா
அருவியென மண்ணில் இறங்கி

கரிய நதியென
காற்றில் ஓடும்
உன் கையெழகென்ன?

உண்மையில்
உனக்கிருப்பது துதிக்கையல்ல;
நதிக்கை ;

மலர்க்கூட்டத்தை அள்ளிக்கொள்ளவும்
மரக்கட்டையை அணைத்துக்கொள்ளவும்
ஒரே கரத்தையே
நீட்டுகிறது நதி ;

புல்லைக் கொய்வதையும்
பூமரம் சாய்ப்பதையும்
ஒரே கரத்திலேயே
சாதிக்கிறாய் நீ ;

யாருக்கு வரும்
உன்னைப் போன்ற
மென்வன்மை;

அன்பால் செய்யப்பட்ட
அன்னையர் தவிர ;

கையில் இரு
கண்மணிகள் போல்
மூக்குத்துளைகள் தெரிய

கையாலும்
கண்ணாலும்
மூக்காலும்
நீ சுவாசிக்கிறாயோ
என ஐயுறுவேன் ;

காற்றில் துழாவி
காதங்கள் பல சென்று
வாசம் அள்ளி வரும்
கை உன் கை ;

விலங்கினங்களில்
கையால் உண்ணும்
நாகரிகம்
கற்றவன் நீ மட்டும் தானே;

நிலத்தடியில் ஓடும்
நீரின் ஓசையை
அறியும் செவி
உன் கையல்லவா?

கைநாசியால் நீ
நீர் உறிஞ்சும் போது
நதிக்குள் நதி
செல்வது போலிருக்கும் ;

கையுடைய விலங்கென்பதால்
நீ கைம்மா அல்ல ;
கையே நீ என்பதனால் தான்
நீ கைம்மா ;

200 கிலோ
உணவு;

200 லிட்டர்
தண்ணீர்;

என அன்றாடம்
உட்கொண்டு

உன்
மூதன்னை ஒருத்தி
முன்செல்ல

காட்டில் செல்லும்
ரயில்தொடர் நிகர

உற்றார் உறவினருடன்
நெடுந்தூரம் பயணித்து
வழித்தடம் அமைக்கும்
முன்னோடியல்லவா நீ;

கருப்பெரும் ரயிலிலிருந்து
இறங்கும் கழிவுகள்
பசுமை சுமக்கும்
விதைகளல்லவா?

கண்ணில் தெரிவதையெல்லாம்
காதில் விழுவதையெல்லாம்
கருத்தில் பதியும் நீ
கானகத்து கணிப்பொறியன்றோ?

ஆடி வைத்தால்
ஆடிப் போகாமல்
ஆடியில் இருப்பது
தானென்றறிந்து கொள்ளும்
மா அறிஞன் நீ ;

கருப்பு நெருப்பென
ஒளிவிட்டு காண்போர்
கண் பறிக்கும்
பேரின்பப் பேரழகன் நீ;

பூவுலகில் உள்ள
மிகப்பெரும் நுண்ணுயிரும் நீயே ;

போயும் போயும்
மனிதனுக்கு மண்டியிடும்
விநோதப் பேருயிரும் நீயே;

உன் மேல்
ஏறும் ஒருவனை
நீ உனதாக்குகிறாய்;

யானைப்பாகன் என்றால்
யானையின் பாகங்களில் ஒருவன்
என்றல்லவா சொல்கிறது தமிழ் ;

ஆனால்
நாங்களோ

உனக்குள் இருக்கும்
உண்மையான உன்னை அழித்து

உனக்குள் நாங்கள்
விரும்பும் உன்னை ஏற்றி

உனக்கு “கும்கி”
என்று பெயர் வைத்தோம்;

வனம் விட்டு
வனம் ஏக
நீ பயன்படுத்தும்
வலசைப் பாதைகளை
உனக்கு
வலிசெய் பாதைகளாய்
மாற்றினோம் ;

காட்டுக்குள்ளே
கட்டடம் பல எழுப்பினோம் ;

காட்டை ஊடறுத்து
ரயில் பாதை அமைத்தோம் ;

உன்
முன்னோர் உனக்களித்த
மரபறிவை மழுங்கடித்து
மனிதர்கள் என்று
மார்தட்டினோம்;

பட்டாசு வெடித்து
உன் காதுக்கு
விஷம் கொடுத்தோம்;

பயந்து பயந்து
பதைபதைத்து
பதறியோடி நீ
பரிதவிப்பதையும்

திசைமாறி
திக்குமுக்காடி
போராடி நீ
உயிரிழப்பதையும்

பார்த்துப் பார்த்து
கூனிக் குறுகி
வெட்கித் தலைகுனிகிறேன்;

மலையொன்று மட்கி
மண்ணோடு மண்ணாகும்
காட்சியைக் காணக்
கண்கள் சகியுமோ?

காட்டைப் பிரிந்தாலும்
காட்டைப் பற்றியே
நினைத்துக் கொண்டிருப்பாய் நீ;

நாட்டிலேயே இருந்தாலும்
நாட்டைப் பற்றி
பல பேர் நினைப்பதில்லை ;

காடென்றால்
களியாட்டக் கூடம் எனக்கருதும்
அறிவிலிகள் அன்றோ
நாங்கள்;

உனக்கு
வனத்தின் மீது
எத்துணை காதலோ

பணத்தின் மீது
அத்துணை காதல்
எங்களுக்கு ;

அன்று
போரில் உன்னைப்
படைக்கலமாகப் பார்த்த
நாங்கள்

இன்று
பணமென்னும் படைக்கலம் கொண்டு
உன் மீது
போர்தொடுக்கிறோம் ;

உனக்கு பகிர்வு
கலாசாரம் ;

மானுட உலகிற்கு
நுகர்வு கலாசாரம் ;

பணமழை பெய்தால்
கனமழை பெய்யும் என்றும்

கனத்த காகிதத்தை வீசினால்
காற்று வீசும் என்றும்

உளமார நம்பி
வனத்தை வணிக
நிறுவனமாக்கி
வளம் பெருக்க நினைக்கும்
வாலறிவர்கள் அல்லவா நாங்கள் ;

வனம் இல்லாது
போனால்
பூமியிலிருந்து மனித
இனம் காணாது
போகும் என்பதை
மன்பதை உணரும்
நாள் எந்நாளோ?

அடர்ந்த வனங்களை
கொல்லும் போதெல்லாம்
அதனுடன் சேர்த்து
அறத்தையும் அன்றோ
கொன்று குவிக்கிறோம்;

அறமில்லாத அகிலத்தில்
ஆண்டவன் வாழ்வதில்லை;
ஆனைகளும் வாழ்வதில்லை;

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *