தெய்வீகத் தேனீக்கள்

அவர்களின்
காலனி ஆதிக்கத்தில்
காலம் முழுவதும்
கண்ணீரின்றி களிப்புடன்
கட்டுண்டு கிடக்க வேண்டிய
கடப்பாடுஇந்தக்
காசினிக்குண்டு;

அகிலக்குழந்தையை
ஆறுகால்களில்
அள்ளியெடுத்துக் கொஞ்சி
அன்பொழுக அமுதூட்டி
அயராது அரவணைக்கும்
அன்னையர்கள் அவர்கள்;

அன்றாடம் அவர்களின்
முரலிசை நாதத்தை
இசைக்க விட்டபடி சுழல்கிறது
பூலோக இசைத்தட்டு;

அவர்களின்
சின்னஞ்சிறு சிறகடிப்பு
இந்த பூமியின்
இதயத்துடிப்பு;

மரக்கிளைகளில்
அறுகோண வடிவில்
அரும்பெரும் அரண்மனை கட்டும்
ஆதிப்பொறியாளர்கள் அவர்கள்;

அந்த அரண்மனைகள்
தேனென்னும் சிறுபெருந்தெய்வம்
அருள் புரியும் ஆலயங்கள்;

உலகில்
உண்மையில்
தேனொழுகப் பேசுபவர்கள்
அவர்கள் தான்;

ஒரு சொட்டு
தேனுக்காக

பல காத தூரம்
பறந்து

40 ஆயிரம்
மலர்களில் அமர்ந்து
மதுரம் உறிஞ்சும்

உலகின் உயிருள்ள
கையடக்க செயலிகள்
அவர்கள்;

மலர்களிடையே
“மணம்” பேசி முடித்து

மகரந்தம்
திரட்டி

மலர்மழலைகளை
மண்ணில் பூக்க வைக்கும்
மகப்பேறு மருத்துவர்கள்;

காற்றில் மிதக்கும்
கலங்கள் எனப் பறந்து

மலர்களின் காமரசத்தை
சிந்தாமல் சிதறாமல்
கொண்டு சென்று

கானகம் வளர்க்கும்
கலைஞர்கள்;

பசுமை பரப்பும்
பரிசுத்தர்கள்;

தென்னை
வாழை
கொய்யா
ஆப்பிள்
ஆரஞ்சு
பூசணி
பேரிக்காய்
வெள்ளரி
காப்பி
ஏலக்கா

என
தரணியெங்கும் தாவரங்களைத்
தழைத்தோங்கச் செய்து
உலகின் 80%
உணவை உற்பத்தி
செய்யும் நடமாடும் ஆலைகள்;

நஞ்சுள்ளவர்கள் – ஆனால்
நகத்தளவே ஆன உடலில்
நானிலத்தையே சுமக்கும்
நெஞ்சுள்ளவர்கள்;

கொடுக்குள்ளவர்கள் – ஆனால்
கொடுத்துக் கொண்டே இருக்கும்
கொடுப்பினை பெற்றவர்கள்;

நமக்கெல்லாம்
தேன் என்னும்
தேவாமிர்தம் தரும்
அவர்களுக்கு நாம்
ஒருநாள் விருந்து
வைத்தோம்;

ரசாயன உரங்கள்,
பூச்சிக்கொல்லி மருந்துகள்,
மரபணு மாற்றப்பட்ட பயிர்கள்
ஆகியவற்றை ஆதுரத்துடன்
பரிமாறினோம்;

விருந்தை
விரும்பி உண்ட
தேனீக்களின் நரம்பு மண்டலம் நாசமானது;

செல்லும் திசையை அவை
மறந்து போயின;
மறந்து போனதனாலேயே
இறந்து போயின;

வள்ளுவன் சொன்ன படி
ஈதல், இசைபட வாழ்தல்
என இருந்த
ஓர் ஈ வகைக்கு
நாம் ஈறு காட்டினோம்;
ஈடில்லா பாவம் கூட்டினோம்;

தேனீக்கள் இல்லாமல்
மகரந்தச் சேர்க்கையின்றி
மலர்களெல்லாம் மரணம் எய்துகின்றன;

நான் சேர்த்து வைக்கிறேன்
எனும் மானிடக் குரல்களை
மறுதலிக்கின்றன;

மனிதப் புணர்தல் போலில்லை
மலர்களின் புணர்தல்;

எப்போது வரும்
மனிதனுக்கு இந்த உணர்தல்?

ஆறுகால்கள் செய்வதை
இருகால்கள் செய்ய முடியுமா?

மலரின் ரசத்தை
தேனாக்கி மருந்தாக்கி
தருபவை தேனீக்கள்;

மலரின் மீது
மருந்து தெளித்து
ரசாயனத் தேனை
அருந்துபவர்கள் மனிதர்கள்;

ரசாயன ரசிகனானால்
மனிதனை ரட்சிக்குமா
ரசாயனங்கள் எல்லாம்?

ரசாயனத்தின்
கண்ணுக்கு
இருவரும்
இரைகளே;

தேனீக்கள் எனும்
சீரிய சிற்றுயிர்கள்
சீக்கிரம் அழிகின்றன;

மனிதன் என்னும்
பென்னம் பேருயிர்கள்
சிறுகச் சிறுக அழிகின்றன;

பழம் பசியாற்றும்;
பணம் பசியாற்றுமா?

காய்கள் தரும் சுவையை
காகிதக் குவியல்கள் தருமா?

உயிர்க்கொல்லிகள்
உற்பத்தியைப் பெருக்கும்;
உயிரைப் பெருக்குமா?

தேனீக்கள் அழிந்தால்
தாவரங்கள் அழியும்
தாவரங்கள் அழிந்தால்
தாவர உண்ணிகள் அழியும்
தாவர உண்ணிகள் அழிந்தால்
ஊன் உண்ணிகள் அழியும்;

இறுதியில்
மனித இனமே
மண்ணுலகை விட்டு
மறைந்து போகும் ;

சாய்மானத்தில்
ஒன்றைச் சார்ந்து
ஒன்று வாழும்
சீட்டுக்கட்டு
சீவன்கள் அல்லவோ நாம்?

ஒன்று சரிந்தால்
எல்லாம் சரியாதோ?

நாமெல்லாம்
ஒற்றை பெரும்
ரயில்தொடர் போல;

ஒரு பெட்டி புரண்டால்
மொத்த பெட்டிகளும் புரளாதோ?

உயிர்ச்சங்கிலியில்
முதற்பெரும் கண்ணி
தேனீ;

கடைப்பெரும் கண்ணி
மனிதன்;

முதலாவதன் அழிவு
முற்றான அழிவன்றோ?

முதற்பெரும் கண்ணி
முற்றாக அழியும் முன்
கடைப்பெரும் கண்ணி
கண்விழிக்குமா?

அல்லது

முதற்பெரும் கண்ணி
முற்றாக அழிந்த பின்
தானும் அழிந்து
மண் மீது கண் மூடுமா?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *